சட்ட விரோத முறையில் புதிய நிர்வாகம் ; இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தேசிய செயலாளர் குற்றச்சாட்டு
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் சட்ட விரோதமான முறையில் தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் எஸ். எஸ் .நிமால்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
திருகோணமலை கிரீன் வீதியில் உள்ள மண்டபமொன்றில் இன்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் நாங்கள் தற்பொழுதும் நிர்வாக குழுவாகவே இயங்கி வருகின்றோம் மற்றும் ஒரு குழு இடைக்கால குழுவை அமைத்து செயற்பட்டு கொண்டிருக்கின்றது. எங்களுக்கு அறிவித்தல் விடாமல் அவர்கள் நிர்வாகத்தை தெரிவு செய்து காரியாலயத்தை கைப்பற்றி செயற்பட்டு கொண்டு வருவதாகவும் தேசிய செயலாளர் நிமால்குமார் தெரிவித்தார்.
இதேவேளை ஒவ்வொரு மாவட்ட கிளைகளிலும் கிளை உத்தியோகத்தர்களின் உதவியுடன் வங்கி விபரங்களை மாற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட கிளைமினால் குறித்த இடைக்கால நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தேசிய செயலாளர் எஸ்.எச்.நிமால்குமார் தெரிவித்தார்.