இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் தேங்கிக் கிடக்கும் முறைப்பாடுகள்!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சுமார் 11,000 பொது மக்கள் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பணியாளர் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்நோக்குவதாகவும், மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் நேற்று (28.07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
இதன்போதே குறித்த விடயம் தொடர்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, பணியாளர்கள் பற்றாக்குறை தொடர்பில் விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கான வழிகாட்டுதல்களை விரைவாக தயாரித்து சமர்ப்பிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டதுடன், ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளைக் குறைப்பதற்கான சாத்தியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.