இலங்கை அரச ஊழியர்களுக்கு கடுமையாகும் சட்டம்!
அரச ஊழியர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகளாக குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் கடமை புரியும் அரச ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதினூடாக நாட்டின் சட்டத்தை மீறினால், அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டின்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
கடந்த வாரமும் நாடு முழுவதும் வழமையான செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடையும் என்று கூறப்பட்டது. பாடசாலை நடவடிக்கைகள் இடம்பெறாது, வைத்தியசாலைகளும் செயற்படாது, பஸ்கள் நிறுத்தப்படும், புகையிரதங்களும் நிறுத்தப்படும் என்று தெரவிக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.
சமகால அரசு நாட்டில் இடம்பெற்ற மின் துண்டிப்பை இல்லாமல் செய்தது. தற்பொழுது தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுகின்றது. பல நாட்களாக தமது வாகனங்களுடன்; எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்து சிலர் இறந்த சம்பவங்களும் பதிவாகின. தற்போது எந்தவொரு எரிபொருள்ள வரிசையும் இன்றி எரிபொருட்களை பெற்றுக்கொள்கின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை எதிர்வரும் 20 ஆம் திகதி கூடி நீண்டகால நிதி உதவியை எமக்கு வழங்க உள்ளது. இதற்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு அந்நிறுவனம் தயாராக உள்ளது. இதனை சீர்குழைப்பதற்கு இடமளிக்காமல் அரசினால் மக்களின் வாழ்க்கை, மாணவர்களின் கல்வி, நாட்டில் நாளாந்தம் கடமைகளில் ஈடுபடுவோர், கூலித் தொழிலை மேற்கொள்வோர், சுய முயற்சிகளில் ஈடுபடுவோர் உள்ளிட்டோரின் நலனுக்காக தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொடர்ச்சியாக அரச சேவையை முன்னெடுப்பதற்காக இவற்றை அத்தியவசிய சேவையாக வர்த்தமானியின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகம், போக்குவரத்து, தபால், மின்சாரம் உள்ளிட்ட அனைத்தும் அத்தியவசிய சேவைகளாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. நாட்டில் சட்டத்தை சீர்குழைத்தால் அதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சட்டத்தை சீர்குழைத்த பின்னர் முன்னெடுக்கப்படும். சட்டத்தை முறையாக செயற்படத்த வேண்டும் என்பதை வர்த்தமானி அறிவிப்பில் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.