மோசடி அழைப்புகள் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!
பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொருவரும் வாரத்திற்கு இரண்டு மோசடி அழைப்புகளை எதிர்கொள்வதாக புதிய புள்ளிவிபரம் ஒன்று தெரிவித்துள்ளது.
Nationwide Building Society அமைப்பால் நடத்தப்பட்ட புதிய பகுப்பாய்வில், இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 57 சதவீதமானவர்கள் இவ்வாறான மோசடி அழைப்புகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
கால் பகுதிக்கும் மேற்பட்டோர், ஏறக்குறைய 28 சதவீதமானோர் வங்கியில் இருந்து வருவது போன்ற போலி அழைப்புகளை பெறுவதாக தெரிவித்துள்ளனர். அவற்றை வேறுப்படுத்துவது கடினமாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மோசடியாளர்கள் சம்பந்தப்பட்டவரின் தனிப்பட்ட வங்கி விபரங்களையும், பாதுகாப்பு குறியீடுகளை வழங்கவும் கோருவதாக தெரிவிக்கப்படுகிறது. அல்லது வங்கியில் இருந்து அழைப்பவர்கள் போல் பேசி, பணத்தை மாற்றுவதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 50 சதவீதமானவர்கள் இவ்வாறான அழைப்புகளை துண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் 29 சதவீதமானவர்களே இது தொடர்பில் முறைப்பாடு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.





