டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்
கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா நீதவான் முன்னிலையில் அவர் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கியொன்று, 2019 ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகவே அவர் கடந்த 26 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
மதூஷிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அந்தத் துப்பாக்கியின் இலக்கங்களைச் சோதித்தபோது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த துப்பாக்கி காணாமற்போனமை குறித்து தெளிவுபடுத்தத் தவறியமையால் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவில் விசாரிக்கப்பட்ட நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





