ஐரோப்பாவை அழிக்கக் காத்திருக்கும் ரஷ்யாவின் ஐந்தாவது படை! போலந்து பிரதமர் எச்சரிக்கை
ஐரோப்பிய ஒன்றியத்தை உள்ளிருந்தே அழிப்பதை ரஷ்யா இலக்காகக் கொண்டுள்ளதாகப் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய (EU) உறுப்பு நாடுகளுக்குள் இருக்கும் ரஷ்யாவின் ஐந்தாவது படையைப் பயன்படுத்தி இந்தச் சதியை மேற்கொள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் மறைமுகமான போர் நடவடிக்கையை புட்டின் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகப் போலந்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி போலந்து எல்லைக்குள் நடந்த பாரிய ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதல் ஒரு ஆக்கிரமிப்புச் செயல் என்றும், அது புடினின் ஐரோப்பா மீதான போர் நடவடிக்கையின் ஒரு செயலே என்றும் போலந்து பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்றதொரு மிகவும் சிக்கலான போர் நடவடிக்கையை ஐரோப்பா மீது புடின் மேற்கொண்டு வருகிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு அமைப்பாகவும், ஐரோப்பாவை ஒரு கலாச்சார இருப்பாகவும் அழிக்க கருவிகளை புடின் கொண்டுள்ளார்.
ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் ஐந்தாவது படை என்ற ஒரு பிரிவை புட்டின் ஆழ ஊடுருவியுள்ளதாகப் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் குறிப்பிட்டார்.
இந்த ஐந்தாவது படை என்பது ஒரு நாட்டின் எதிரிகளுக்கு ஆதரவாக உள்ளிருந்தே நாசவேலை செய்யும் குழுவைக் குறிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





