தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கோரிக்கை!
பல தசாப்தங்களாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வாக்குரிமை மற்றும் முழு குடியுரிமை வழங்குமாறு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் எஸ். ராம்தாஸ் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை அகதிகளில் பலர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.
இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பிறகு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னரும் பலர் தமிழ்நாட்டிலே வசிப்பதாக தெரிவித்துள்ளார்.
“கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர்கள் தமிழ்நாட்டில் 116 அகதி முகாம்களில் வாழ்கின்றனர். இந்தியாவில் பல தசாப்தங்களாக வாழ்ந்தாலும், இந்த அகதிகள் இன்னும் சுதந்திர குடிமக்களாக வாழ அனுமதிக்கப்படவில்லை.
இங்கு பிறந்து படித்த இளைய தலைமுறையினர் இன்னும் அடிப்படை உரிமைகளை இழந்துள்ளனர். பலர் தங்கள் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வியை முடித்துள்ளனர். ஆனால் அவர்களால் சட்டத்தின்படி அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை” என சுட்டிக்காட்டியுள்ளார்.





