அமெரிக்க எரிபொருள் நிலையத்தில் வேலை செய்த இந்திய மாணவர் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரத்தில், ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
27 வயது சந்திரசேகர் போலே இரவு எரிபொருள் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத ஒருவரால் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பல் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் படிப்பை ஹைதராபாத்தில் முடித்த சந்திரசேகர் போலே 2023ல் உயர் படிப்புக்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.
ஆறு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த அவர், எரிபொருள் நிலையத்தில் பகுதிநேரமாக வேலை செய்து வந்த போது தாக்குதல் நடந்துள்ளது.
மேலும், சம்பவம் குறித்து டெக்சாஸ் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மாணவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மகனின் உடலை நாட்டிற்கு கொண்டு வருவதில் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.





