ரஷ்யா ஒரு ‘காகிதப் புலி’,உக்ரைன் இழந்த அனைத்து பிரதேசங்களையும் மீண்டும் கைப்பற்ற முடியும் ; டிரம்ப்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வின் போது உரையாற்றிய அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவோடு போரில் இழந்த பகுதிகள் முழுவதையும் உக்ரேன் மீட்டெடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் ஆகாயவெளியின் எல்லைகளை மீறும் ரஷ்யாவின் விமானங்களைச் சுட்டு வீழ்த்துமாறும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
பதற்றம் சூழ்ந்த நிலையில் ரஷ்ய அதிபர் புட்டின் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்ற நம்பத்தகுந்த பங்காளிதானா என்பதில் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருப்பதையும் அதிபர் டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். அதுபற்றி விரைவில் தெரிவிப்பதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யா தற்போது பெரிய பொருளியல் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. அதனை உக்ரேன் பயன்படுத்தி உடனே செயல்படவேண்டும் என்று அதிபர் டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் இந்தக் கருத்துகளை பெரிய மாற்றம் என்று உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.
ஆயினும், டிரம்ப்பின் வார்த்தைகளை வைத்து, ரஷ்யா மீது பெரிய தடைகள் விதிக்கப்படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. இதற்கு முன்பாக, அமைதி ஏற்படவேண்டுமென்றால், உக்ரேன் அதன் பகுதிகளை இழக்கத் தயாராக வேண்டும் என்று அவர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புட்டினை ஒரு மாதத்துக்கு முன்புதான் டிரம்ப் சந்தித்தார். “குறிக்கோளில்லாமல் மூன்று ஆண்டுகளாக போரிடும் ரஷ்யா ஒரு காகிதப் புலி, ஐரோப்பிய நாடுகளின் வான் எல்லைகளில் அத்துமீறும் அதன் விமானங்களை சுட்டு வீழ்த்த வேண்டும்” என்று அதிபர் டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.





