இந்தியாவை குறிவைத்துள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்

உக்ரைன் மோதல் தொடங்கிய பின்னர் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்தியாவை குறிவைத்துள்ளன. இதனை வெளியுறவு அமைச்சகம் நியாயமற்ற நடவடிக்கையாக குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை மேலும் உயர்த்த உள்ளதாக அறிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகம், “இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது. தேச நலனையும் பொருளாதாரப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, இந்தியா தக்க நடவடிக்கைகளை எடுக்கும்,” என அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவை விமர்சிக்கும் நாடுகளே, ரஷ்யாவுடன் அதிகளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்கா – அணுசக்திக்காக யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு, மின்சாரம் உற்பத்திக்கு பல்லேடியம் மற்றும் உரங்கள், ரசாயனங்கள் ஆகியவற்றை தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, இந்தியா வழக்கமாக கொள்முதல் செய்து வந்த எண்ணெய் ஐரோப்பா நோக்கி திருப்பப்பட்டதால், மலிவு விலையில் கிடைத்த ரஷ்ய எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யத் தொடங்கியதாக வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
மேலும், உலக எரிசக்தி சந்தைகளில் நிலைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிகளை அமெரிக்காவும் அப்போது ஊக்குவித்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.