இந்தியா – காதல் திருமணம் செய்த ஜோடியைக் கலப்பையில் பூட்டி துன்புறுத்திய கிராமவாசிகள்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள ராயகடா மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த இளம் ஜோடியைச் சிலர் மாடுகளைப் போலக் கலப்பையில் கட்டி வைத்து வயலை உழ வைத்துத் துன்புறுத்தியுள்ளனர்.
கஞ்சமாஜிரா கிராமத்தைச் சேர்ந்த அந்த இளம் ஜோடி அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டது.இருப்பினும், அந்தத் திருமணத்தைச் சில கிராமவாசிகள் எதிர்த்தனர்.
தங்கள் சமூக வழக்கப்படி இது பொருந்தா திருமணம் எனக் கூறிய கிராமவாசிகள் சிலர் அந்தத் தம்பதியைக் கலப்பையில் பூட்டி உழச்செய்ததோடு, பிரம்பால் தாக்கவும் செய்துள்ளனர்.பின்னர், கோவிலுக்கு அழைத்துச் சென்று பரிகாரப் பூஜை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் நேரடியாக அக்கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளம் தம்பதி கலப்பையில் பூட்டப்படும் காணொளி வெளியான நிலையில், பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளதோடு, இத்தகைய பழமைவாத நடவடிக்கைகளைக் களையக் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.