உலக பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய சவால்: பிரதமர் ரிஷி சுனக் பேச்சு
உலக பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய சவாலாக உள்ளது என ஜி7 மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா, அமெரிக்கா, கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்று வருகிறது.மூன்று நாள் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் உக்ரைன் போர் மற்றும் சீனாவால் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து முக்கிய விவாதங்களை உலக தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 உச்சி மாநாட்டில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நேற்று நேரில் கலந்து கொண்டு போருக்கு தேவையான ஆயுத உதவிக்கான கோரிக்கையை உலக தலைவர்களிடம் முன்வைத்தார்.
இந்த மாநாட்டில் பேசிய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உலக பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய சவாலாக உள்ளது என தெரிவித்தார்.அத்துடன் உலக அளவிலான பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு சீனா மிகப்பெரிய சவாலை முன்வைக்கிறது, மேலும் சீனா தங்களது சர்வாதிகாரத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தீவிரப்படுத்தி வருகிறது என்று குறிப்பிட்டார்.
இத்தகைய அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்து கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கையும் ஜி7 நாடுகள் மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.