நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? அறிகுறிகள் இதுதான்

மன அழுத்தம் (Depression) ஒரு நோய். இன்றைய காலகட்டத்தில், நாளிதழ்களில் அதைப் பற்றிய செய்திகள் நிரம்பி வழிகின்றன. மன அழுத்தம் என்றால் என்ன? யாரெல்லாம் அதன் பாதிப்புக்கு உள்ளாகக் கூடும்?
ஏமாற்றங்களும் பிரிவுகளும் இழப்புகளும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு ஆழமானதாக இருந்தால், மனம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல், சோகத்தில் தேங்கிவிடும். இந்தத் தேக்க நிலை, அதாவது நிஜத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனத்தின் போராட்டம் மன அழுத்தத்தின் ஒருவகை என்றால், மூளையில் சுரக்கும் வேதிப்பொருட்களின் குறைபாட்டால் ஏற்படும் மன அழுத்தம் மற்றொரு வகை ஆகும்.
மன அழுத்தம் என்றவுடன், அதனால் பாதிக்கப்படவர்கள் சோகமாக வலம் வருவார்கள் என்றோ எந்நேரமும் அழுவதற்குத் தயாராக இருப்பார்கள் என்றோ எண்ண வேண்டாம். வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் மீதான ஈடுபாட்டுக் குறைவே மன அழுத்தம். மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடுவார்கள்; தூங்குவார்கள்; சுற்றத்தை விட்டு விலகுவார்கள்; நட்பைத் தவிர்த்துத் தனிமையை விரும்புவார்கள்; வழக்கமான செயல்களில் நாட்டமின்றி இருப்பார்கள்.
ஒரு செயலைச் செய்வதற்கான ஆற்றல் குறைந்தவர்களாகவோ ஆற்றல் இல்லாதவர்களாகவோ இருப்பார்கள். வழக்கத்துக்கு மாறாக அதீத மறதியுடன் ஒருவிதக் குழப்ப மனநிலையில் இருப்பார்கள். கோபமும் வருத்தமும் பயமும் மிகுந்து ஒருவித விளிம்பு நிலையில் / உணர்ச்சிகள் வெடித்துவிடும் நிலையில் அவர்கள் இருப்பார்கள். தனக்கோ பிறருக்கோ தீங்கு விளைவிக்கும் எண்ணமும் அவர்களிடம் இருக்கும். நீண்டகால நோய்கள், பதற்றம், எண்ணச் சுழல் நிர்ப்பந்த நோய், மனச்சிதைவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளோடு மனஅழுத்தத்துக்குத் தொடர்புண்டு. இது வழக்கமாக இரண்டாண்டுகளோ அதற்கு மேற்பட்ட ஆண்டுகளோ நீடிக்கலாம்.
மன அழுத்தம் என்பது மனிதனுக்கு இயல்பான ஒன்றுதான். மனிதனுக்கு உணர்ச்சிகள் அதிகமாவதும், ஒரு சில நேரங்களில் உணர்ச்சியற்று இருப்பதும் பொதுவான ஒன்று. மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தம் என்பது பல காரணங்களால் ஏற்படும். சுற்றுப்புறத்தில் இருந்து வரலாம், நம் உடலில் இருந்தே வரலாம், நம் சிந்தனையில் இருந்து மன அழுத்தம் வரலாம்.
ஒரு விஷயத்தைக் குறித்து பதற்றப்படும்போதுதான் மன அழுத்தம் பெறுகிறது. எனவே, நமக்கு இது ஓர் அலர்ட் என கருதி, எதைக் குறித்து நாம் பயப்படுகிறோமோ, எதைக் குறித்து பதற்றப்படுகிறோமோ, அதை எப்படி சரி செய்வது, எப்படி அதில் வெற்றியடைவது என அதிக கவனம் செலுத்த வேண்டும். முடிந்த அளவு மன அழுத்தம் ஏற்படாதவாறு சிந்தனையை பார்த்துக்கொள்ள வேண்டும்.மன அழுத்தத்தால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்கள் பாதிப்பாகவும் மாறும்
ஒருவர் மன அழுத்தத்தோடு இருந்தால் அவரது சுவாச அமைப்பு உடனடியாக பாதிப்படையும். மூச்சு விடுவதற்கு சிரமப்படுவர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், ரத்த ஓட்டம் சீராக இருக்காது. மூச்சை உள் இழுப்பதற்கே சிரமமாக இருக்கும். ஒருவர் மிகுந்த பதற்றத்தோடு இருந்தாலும் இது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை அழித்துவிடும். ‘கார்டிசோல்’ என்பது ப்ரைமரி மன அழுத்த ஹார்மோன். மன அழுத்தம் ஏற்படும்போது, இது சுரப்பதால் எதிர்ப்பு சக்திகளை அடக்கி விடுகிறது. மேலும், இன்ஃப்ளமேட்டரி வழியையும் சிதைக்கிறது. இதனால் உடல் பேக்டீரியா மற்றும் வைரஸுடன் போராட முடியாமல் உடல் சீரற்று போய்விடும்.
மன அழுத்தத்தால் தசை மற்றும் எலும்பு பகுதிகளும் பாதிப்படையும். இயல்பாகவே உடலின் சதைப் பகுதி, உடலின் உட்புற பாகங்களை பாதுகாக்கும் வண்ணம் அமைந்துள்ளது. ஆனால், மன அழுத்தம் ஏற்பட்டால் தசைப் பகுதிகள் வலுவிழக்கும் மற்றும் தோள்பட்டை, கழுத்து, முதுகு பகுதிகளில் வலி ஏற்படும். தலைவலி பலமாக இருக்கும்.
மன அழுத்தத்தினால் இரத்த ஓட்டம் அதிகமாகும். மனம் திரும்ப பழைய நிலைக்கு வந்துவிட்டால், சரியாகிவிடும். ஆனால் தொடர்ந்து ஒரு நபர் ஒரே விஷயத்தாலோ அல்லது ஒரே அளவில் மன அழுத்தத்தில் இருந்தால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மன அழுத்தத்தினால் நாளமில்லா அமைப்பு பாதிக்கப்படும். நாளமில்லா அமைப்பு உடலில் அதிக வேலை செய்கிறது. சிந்தனை, திசுக்களின் செயல்பாடுகள், மெட்டாபாலிஸம் இதனால் பாதிக்கப்படும். மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ், நாளமில்லா அமைப்புடன் நரம்பு மண்டலத்தை இணைக்கிறது. மன அழுத்தம் ஏற்படும்போது இதுதான் கார்டிசோலை தூண்டுகிறது.
மன அழுத்தம் ஏற்படும்போது இரைப்பை குடலில் பாதிப்புகளும் ஏற்படும். சரியான செரிமானம் இருக்காது. மன அழுத்தத்தின் போது உணவுப் பழக்கம் மாறும். அதை இரைப்பை ஏற்காது. இதனால் வயிறு வலி, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
மன அழுத்தத்தின் விளைவாக இனப்பெருக்க அமைப்புகள் பாதிக்கப்படும். தொடர் மன அழுத்தத்தால் டெஸ்டோஸ்டெரோன் மற்றும் ஸ்பெர்ம் உற்பத்தியாவது பாதிக்கப்படும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படும்