சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து!

வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி இடத்தை உறுதிசெய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 236 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து 46.1 ஓவரில் 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் ரச்சின் ரவீந்திரா 112 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் நியூசிலாந்து, இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றதால் குரூப் ‘ஏ’-வில் இருந்து இந்த இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறுகின்றன. மேலும், ‘ஏ’ பிரிவில் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ள பாகிஸ்தான், வங்கதேச அணிகள் இந்த தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
இதில், தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணிவெளியேறியதால், அந்நாட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாகிஸ்தான் அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், அந்த போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தினாலும், பாகிஸ்தான் இரண்டு புள்ளிகளை மட்டுமே பெற முடியும். அதே நேரத்தில் நியூசிலாந்து ஏற்கனவே நான்கு புள்ளிகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாளில் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிராகவும், தென்னாப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் முதல் ஆட்டத்தில் வென்றுள்ளன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.