இலங்கையில் அரசுக்கு சொந்தமான இல்லங்களை வழங்காமல் தாமதப்படுத்தும் அரசியல்வாதிகள்
இலங்கையில் அரசுக்கு சொந்தமான இல்லங்களைக் கையளிக்குமாறு முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு மீண்டும் நினைவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொது நிர்வாக அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் 31 அமைச்சர்களுக்கு அரச இல்லங்கள் வழங்கப்பட்டிருந்தன.
அவர்களில் 13 பேர் மாத்திரமே இதுவரையில் அரச இல்லங்களை மீளக் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் வீடுகளை மீளக் கையளிக்கும் போது அவற்றின் மின்சார மற்றும் நீர் கட்டணங்கள் முழுமையாகச் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அரச இல்லங்களைக் கையளிப்பதற்குத் தவறும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சரான பிரதமர் ஹரினி அமரசூரிய வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.