உலகக்கோப்பையில் இந்திய வீராங்கனைக்கு தண்டனை.. பாகிஸ்தான் போட்டியில் செய்த செயல்
2024 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடவடிக்கை எடுத்துள்ளது.
அவருக்கு ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அருந்ததி ரெட்டி ஐசிசி நடத்தை விதியை மீறி நடந்து கொண்ட காரணத்தால் அவருக்கு இந்த டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான குரூப் ஏ பிரிவு போட்டியில் சிறப்பாக பந்து வீசி 19 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அருந்ததி ரெட்டி வீசிய 20வது ஓவரில் நிதா தார் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை வீழ்த்திய பின் ஆக்ரோஷமாக அவரை வெளியேறுமாறு சைகை செய்தார் அருந்ததி.
ஐசிசி நடத்தை விதிகளின் படி இது விதி மீறல் ஆகும்.
ஒரு சர்வதேச போட்டியின் போது ஒரு வீரர் ஆட்டம் இழந்து செல்லும் போது அவரை இழிவுபடுத்தும் வகையிலோ, ஆக்ரோஷமான, எதிர்வினையை தூண்டக்கூடிய மொழி, செயல் அல்லது செய்கையைப் பயன்படுத்துதல் விதி மீறல் என ஐசிசி விதிகளில் குறிப்பிட்டு உள்ளது.
அதன் படி பாகிஸ்தான் வீராங்கனைக்கு எதிராக சைகை காட்டிய அருந்ததி ரெட்டிக்கு ஒரு டீமெரிட் புள்ளி மட்டும் வழங்கப்பட்டு உள்ளது. அவருக்கு அபராதம் ஏதும் வழங்கப்படவில்லை.
24 மாத காலத்தில் ஒரு ஒரு வீரர் அல்லது வீராங்கனை நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட டீமெரிட் புள்ளிகளை பெற்றால் அவருக்கு சில போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
24 மாத காலகட்டத்தில் அருந்ததி ரெட்டி செய்யும் முதல் தவறு என்பதால் அவருக்கு ஒரு டீமெரிட் புள்ளி மட்டும் அளிக்கப்பட்டு உள்ளது.
அவருக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.