சிங்கப்பூரில் அரிய வகை இரத்தப் புற்றுநோயைக் குணப்படுத்தும் சிகிச்சை கண்டுபிடிப்பு

சிங்கப்பூரில் அரிய வகை இரத்தப் புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடிய புதிய உயிரணுச் சிகிச்சை முறை உருவாக்கப்பட்டுள்ளது.
T-ALL அதாவது T-cell acute Lymphoblastic எனும் ஒரு வகைக் கடும் இரத்தப் புற்றுநோய் இருப்பவர்களிடம் அந்தச் சிகிச்சை முறையைப் பரிசோதனை செய்ததில் 94 சதவீதமானோருக்கு அறிகுறிகள் குறைந்திருப்பது தெரியவந்தது.
புதிய சிகிச்சை முறை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பாடசாலை ஆய்வாளர்களாலும் மருத்துவர்களாலும் உருவாக்கப்பட்டது.
சிங்கப்பூரில் அரிய வகை T-ALL இரத்தப் புற்றுநோய் ஆண்டுதோறும் சுமார் ஐந்து பேரிடம் கண்டறியப்படுகிறது.
பெரும்பாலான நோயாளிகளுக்கு வழக்கமான சிகிச்சை பலன் தந்துவிடும். பலன் பெறாதவர்கள் உயிர் பிழைக்கும் சாத்தியம் 10 சதவீதமாகும். ஆனால் புதிய CAR T உயிரணுச் சிகிச்சை முறை அதனை 50 விழுக்காட்டிற்கு உயர்த்தக்கூடும்.
வேறு வகை ரத்தப் புற்றுநோய்களுக்கும் புதிய சிகிச்சை முறையை விரிவுபடுத்தப் பெரிய அளவிலான கூடுதல் பரிசோதனைகள் தேவைப்படும் என்று ஆய்வுக்குழு கூறியது.