புதிய பிரதமர் தேர்வு குறித்து கட்சித் தலைவர்களுடன் மக்ரோன் பேச்சுவார்த்தை
பிரான்சில் நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிந்து ஏறக்குறைய ஏழு வாரங்களுக்கு மேல் நீடித்த முட்டுக்கட்டைக்கு முடிவு வந்துள்ளது. புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க அதிபர் இம்மானுவல் மக்ரோன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) இடதுசாதி, வலதுசாரி, மிதவாதக் கட்சித் தலைவர்களைச் சந்திக்கிறார். மக்ரோன் முன்மொழிபவர் யாராக இருந்தாலும் அவரது பணி கடினமானதாகவே இருக்கும்.
பிரான்ஸ் அரசாங்கம் அதன் நிதிப் பற்றாக்குறையைத் தணிக்க வேண்டுமென ஐரோப்பிய ஆணையமும் பத்திரச் சந்தையும் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், 2025 வரவுசெலவுத் திட்டத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறுவது முதல் பல சவால்களை அவர் சமாளிக்க வேண்டியிருக்கும்.யார் பிரதமராவார், அவரால் எந்த சீர்திருத்தத்தையும் முன்னெடுக்க தொங்கு நாடாளுமன்றத்தின் ஆதரவைப் பெற முடியுமா என்பதெல்லாம் இன்னும் கேள்விக்குறிகளாக உள்ளன.
மக்ரோன் திடீரென தேர்தலை நடத்தியது, அவருக்குப் பின்னடைவையே ஏற்படுத்தியது. ஜூன் 30, ஜூலை 7 ஆம் திகதிகளில் நடைபெற்ற தேர்தலில் அவரது மிதவாதக் கூட்டணி பல இடங்களை இழந்தது. இதனால் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது.கேப்ரியல் அட்டால் தலைமையிலான மிதவாத அரசாங்கம் ஜூலை தேர்தலுக்குப் பிறகு பதவி விலகியது. எனினும், பராமரிப்பு அரசாங்கமே பாரிஸ் ஒலிம்பிக்கை நடத்தியது.
பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு மக்ரோன் ஒரு பிரதமரை நியமிப்பார். ஆகஸ்ட் 26 வரை பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இடதுசாரி கூட்டணியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியூ பாப்புலர் ஃப்ரண்டின் (NFP) வேட்பாளரான 37 வயது மூத்த அரசு ஊழியரான லூசி காஸ்டெட்ஸை பிரதமராக்க முடியாது என மக்ரோன் மறுத்துவிட்டார். அக்கட்சி அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை இல்லை என்பதை மக்ரோன் சுட்டிக்காட்டினார்.மாறாக, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க கட்சிகளுக்கு அப்பாற்பட்டு உடன்பாடு காணுமாறு அவர் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நியூ பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஃபேபியன் ரூசல், காஸ்டெட் நியமிக்காதது கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.ஆனால் காஸ்டெட்ஸ் பிரதமராவதற்கான வாய்ப்புகள் குறைவு.
புதிய நாடாளுமன்றத்தின் மைய சக்தி, அல்லது மிதவாத அல்லது வலதுசாரி மிதவாதிக் கட்சியிடமே இருக்க வேண்டும் என்று அதிபர் நம்புவதாக மக்ரோனுக்கு நெருக்கமான வட்டாரம் ஆகஸ்ட் மாதம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தது.
கன்சர்வேடிவ் கட்சியின் வட்டாரத் தலைவர் சேவியர் பெர்ட்ராண்ட், முன்னாள் சோசலிஸ்ட் பிரதமர் பெர்னார்ட் கேசிவேவ் ஆகியோர் அடங்குவர். ஃபிரெஞ்சு ஊடகங்கள் அண்மையில் மற்றொரு சாத்தியமான பெயராக பாரிஸ் புறநகரின் சோசலிஸ்ட் மேயரான கரீம் போம்ரானைக் குறிப்பிட்டது.
அதிபர் தனக்கு விருப்பமானவரைப் பிரதமராக நியமிக்க சுதந்திரம் உண்டு என்று ஃபிரெஞ்சு அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது. எனினும், அவர்கள் எதிர்கட்சியின் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தப்பிக்க வேண்டும்.