சூடான் போர்: பலியான மக்களின் எண்ணிக்கை வெளியானது
சூடான் தலைநகர் கார்டூமின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சண்டை மற்றும் கனரக ஆயுதங்களால் தாக்குதலும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை பலியான அப்பாவி மக்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
சூடானின் இரண்டு உயர்மட்ட தளபதிகளுக்கு இடையே போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட போதிலும், ஆட்சி அதிகாரத்திற்கான இந்த போரில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாட்டைவிட்டு வெளியேறும் நிலையும் ஏற்பட்டது.
இரு தரப்புக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் அப்பாவி மக்கள் சிக்கியதால், பொதுமக்களின் இறப்பு எண்ணிக்கை சனிக்கிழமை 411 ஆக உயர்ந்தது. இதனிடையே கார்டூம் நகரின் சுற்றுவட்டாரங்களில் கடைகள் திறந்து செயல்பட துவங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மற்ற பகுதிகளில், பீதியடைந்த குடியிருப்பாளர்கள் தங்களைச் சுற்றி வெடிச்சத்தம் நீடிப்பதாகவும் போராளிகள் வீடுகளை சூறையாடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.தற்போது மூன்றாவது வாரத்தில், சண்டையில் 2,023 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.
இதனிடையே, சூடான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில், போராளிகள் உட்பட ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 528 எனவும், 4,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேற்கு டார்பூரில் மட்டும் தீவிரமடைந்த வன்முறையில் 89 பேர் கொல்லப்பட்டனர் என கூறப்படுகிறது.