ஆயுத பரிவர்த்தனைகளுக்கு தாய்லாந்து வங்கிகளை நாடும் மியன்மார் ;UN அறிக்கை
மியன்மாரின் ராணுவ அரசாங்கம், ஆயுதக் கருவிகள் கொள்முதல் பரிவர்த்தனைகளுக்குச் சிங்கப்பூர் வங்கிகளைவிடத் தாய்லாந்து வங்கிகளை அதிகம் பயன்படுத்துவதாக ஐக்கிய நாட்டு நிறுவன (ஐநா) அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
2021ஆம் ஆண்டின் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் இந்தக் கொள்முதல்களில் அடங்கும்.ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் டாம் ஆண்ட்ரூஸ், ஜூன் 26ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.முன்பெல்லாம் மியன்மாரின் ராணுவக் கொள்முதல்களில் சிங்கப்பூர் வங்கிகளே ஆக அதிகமாக முக்கியப் பங்கு வகித்தன என்று அவர் தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மியன்மாரின் ராணுவ அரசாங்கம் 2022ஆம் ஆண்டு ஏப்ரலுக்கும் 2023 மார்ச் மாதத்திற்கும் இடையில் (நிதியாண்டு 2022) 260 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் (S$353 மில்லியன்) மேற்பட்ட மதிப்பிலான பரிவர்த்தனைகளைச் சிங்கப்பூர் வங்கிகள் மூலம் மேற்கொண்டது. மியன்மாரின் ஆயுதக் கொள்முதல் தொடர்பான கட்டணங்களில் இது 70 சதவீத்த்திற்கு மேல் என்று கூறப்பட்டது.ஆனால், 2023 ஆம் ஆண்டு ஏப்ரலுக்கும் 2024 மார்ச் மாதத்திற்கும் இடையில் (நிதியாண்டு 2023) இந்தத் தொகை வெகுவாகக் குறைந்து 40 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவானது. இதில் பெரும்பாலான பரிவர்த்தனைகள் நிதியாண்டு 2023ன் முதல் காலாண்டில் மேற்கொள்ளப்பட்டவை என்று ஐநா அறிக்கை கூறுகிறது.
ஒப்புநோக்க, தாய்லாந்து வங்கிகள் நிதியாண்டு 2022ல் 60 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கொள்முதல்களைக் கையாண்டன. அதற்கடுத்த நிதியாண்டில் அந்தத் தொகை கிட்டத்தட்ட இரட்டிப்பானதாகத் தெரிவிக்கப்பட்டது.இருப்பினும், வங்கிகள் விருப்பத்துடன் ராணுவக் கொள்முதல்களுக்கு உதவியதாகத் தெரியவில்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
“சிறப்பு அறிக்கையாளரின் ஆய்வில், இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த வங்கியும் அவை மேற்கொண்ட பரிவர்த்தனைகளின் இயல்பு குறித்து அறிந்திருப்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை,” என்று ஐநா அறிக்கை கூறுகிறது.
வங்கிகள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றினாலும், தடைகளை ஏய்க்கவும் சிக்கல்களை நிர்வகிக்கும் நடைமுறைகளைக் கீழறுக்கவும் பரிவர்த்தனைக் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் மியன்மார் ராணுவம் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தியதாக அறிக்கை குறிப்பிடுகிறது.இந்த அறிக்கையைப் பார்த்ததாகவும் அதுகுறித்து விசாரிப்பதாகவும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சு ஜூன் 27ஆம் திகதி கூறியது. மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதற்குமுன் உண்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அது சொன்னது.
முன்னதாக, 2023ஆம் ஆண்டு மார்ச்சில் ஆண்ட்ரூஸ் வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூரை அடித்தளமாகக் கொண்ட வங்கிகள் மியன்மாரின் ராணுவக் கொள்முதல்களுக்குப் பேரளவில் உதவியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் அரசாங்கம் மேற்கொண்ட விசாரணை மிக முக்கியமானது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த நேர்காணலில் ஆண்ட்ரூஸ் கூறினார்.