வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரங்களுக்கு சீனா $429 மில்லியன் நிவாரண உதவி
சீனாவில் இரண்டு வாரங்களாக பெய்து வரும் பருவ மழையில் மோசமான வெள்ளம் ஏற்பட்டு பல நகரங்கள் தத்தளிக்கின்றன. நிலச்சரிவுகளாலும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் அந்நாட்டின் அரசாங்கம் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 2.3 பில்லியன் யுவான் (S$429.3 மி.) நிதியுதவியை அறிவித்தது.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகரங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் அவசரகால உதவிகளை வழங்கவும் அந்நிதி பயன்படுத்தப்படும்.
சீனாவின் பல அரசாங்க அமைப்புகள், பிரிவுகள் ஒதுக்கியுள்ள மொத்த நிதியின் மதிப்பு 2.344 பில்லியன் யுவான் என்று ராய்ட்டர்ஸின் கணக்கு கூறுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அண்மைய பேரிடரில் ஷெஜியாங், அன்ஹுய், ஃபுஜியான், ஜியாங்ஸி, ஹுபெய், ஹுனான், குயிஷோவ், குவாங்டோங், குவாங்ஸி ஆகிய மாநிலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன என்று சிசிடிவி நியூஸ் தெரிவித்தது.
வெள்ளத்திலும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவிலும் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறிப்பாக, 2024ஆம் ஆண்டின் பருவமழையில் தெற்கு சீனா வெகுவாகப் பாதிக்கப்பட்டது. ஆறுகள் நிரம்பி வழிந்து பல மில்லியன் மக்களுக்கு ஆபத்தாக விளங்கியதால் அவசரகாலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டனர்.
ஹுனான் தலைநகரான சாங்ஷாவில் ஸியாங் மற்றும் லாவோடாவோ உள்ளிட்ட ஆறுகளின் நீர்மட்டம் ஜூன் 27ஆம் திகதி காலை அபாயகரமான அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 24ஆம் திகதி பெய்த கனமழையால் தென்சீனாவில் உள்ள பல நகரங்களின் சாலைகள் ஆறுகளாக மாறின. பாதசாரிகளுக்கான சுரங்கங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் பல வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.