சவுதி அரேபியாவில் பாலத்தின் மீது பேருந்து மோதி விபத்து; 20 மெக்கா யாத்ரீகர்கள் உடல் கருகி பலி
சவுதி அரேபியாவில் புனித நகரமான மெக்காவிற்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள் கிழமை சவுதி அரேபியாவின் புனித நகரமான மெக்காவிற்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தெற்கு மாகாணமான ஆசிரில் உள்ள பாலத்தில் மோதி கவிழ்ந்து பின் தீப்பிடித்து எரிந்தது.இந்த பயங்கர விபத்தில் கிடைத்துள்ள முதல் கட்ட தகவலின் அடிப்படையில் 20 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தோராயமாக 29 பேர் ஆக உள்ளது என்று மாநிலத்துடன் இணைந்த அல்-எக்பரியா சேனல் தெரிவித்துள்ளது.விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வெவ்வெறு நாட்டினை சேர்ந்தவர்கள் என்றும் ஆனால் எந்தெந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடவில்லை.
விபத்தின் போது பேருந்தில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து அல்-எக்பரியா சேனல் குறிப்பிடாமல் தகவல் வெளியிட்டது. ஆனால் பேருந்தின் பிரேக்கில் ஏற்பட்ட சிக்கலால் விபத்து ஏற்பட்டதாக தனியார் செய்தித்தாள் ஓகாஸ் குறிப்பிட்டுள்ளது.இந்த பயங்கர விபத்து இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவின் வழிபாட்டாளர்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதில் உள்ள தொடர்ச்சியான சவால்களை எடுத்துக்காட்டுகிறது.