சவூதி அரேபியாவில் 4,000 ஆண்டுப் பழைமையான நகரம் கண்டுபிடிப்பு
சவூதி அரேபியாவின் வடமேற்கில் பாலவனச் சோலையாக அமைந்துள்ள ஓர் இடத்தில் தொல்பொருள் துறையினர் 4,000 ஆண்டுப் பழைமையான நகரத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.அல்-நட்டா என்பது அதன் பெயர்.
கைபர் பகுதியில் மறைந்திருந்த அந்நகரில் 14.5 கிலோமீட்டர் நீளச் சுவர் கட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அது வறண்ட பாலைவனம் சூழ்ந்த பசுமையான பகுதியாகும்.
குடியிருப்புப் பகுதியைச் சுற்றிலும் அவ்வாறு பாதுகாப்பான சுவர் அமைக்கப்பட்டதாக பிஎல்ஓஎஸ் ஒன் சஞ்சிகையில் வெளியான அண்மைய ஆய்வு கூறுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பு, நாடோடி வாழ்க்கையிலிருந்து அக்கால மக்கள் நகர்ப்புற வாழ்க்கைமுறைக்கு மாறியதை எடுத்துக்கூறுவதாக ஆய்வாளர்கள் கூறினர்.
கிறிஸ்து பிறப்பதற்கு ஏறக்குறைய 2,400 ஆண்டுகளுக்கு முந்தைய வெண்கல யுகத்தின் தொடக்கத்தில் அல்-நட்டா நகரம் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அங்கு 500 பேர் வரை குடியிருந்திருப்பர் என்று ஆய்வாளர்கள் கூறினர்.