புதிய ஏவுகணை தாக்குதல் – ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அழைப்பு
மேற்கு உக்ரைனில் ரஷ்யா புதிதாக உருவாக்கப்பட்ட “ஓரெஷ்னிக்” ஏவுகணையை பயன்படுத்தியதைத் தொடர்ந்து, ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்க தனது நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளது.
தலைநகர் கியேவ் மற்றும் லிவிவ் நகரங்களை இலக்கு வைத்து வெள்ளிக்கிழமை இரவு, நடத்தப்பட்ட தாக்குதல்களில் இந்த புதிய ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ எல்லைக்கு அருகில் இந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டதை, ஐரோப்பிய பாதுகாப்புக்கு “கடுமையான அச்சுறுத்தல்” என உக்ரைன் கூறியுள்ளது.
உக்ரைன் அதிகாரிகளின் தகவலின்படி, கியேவ் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில், ரஷ்யா புதிய இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
லிவிவ் நகரில் முக்கியமான உட்கட்டமைப்புகளும் தாக்கப்பட்டதாக மேயர் ஆண்ட்ரி சடோவி கூறினார்.
உக்ரைன் விமானப்படையின் தகவலின்படி, ஏவுகணை மணிக்கு 13,000 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.
எந்த வகை ஏவுகணை என்பது குறித்து தற்போது ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டு நவம்பரில் உக்ரைனில் உள்ள ஒரு இராணுவ தொழிற்சாலையை இலக்கு வைத்து ஓரெஷ்னிக் ஏவுகணையை ரஷ்யா முதன்முறையாக பயன்படுத்தியதாக மாஸ்கோ தெரிவித்திருந்தது.
அப்போது, ஏவுகணையில் போலி போர்முனைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதால் குறைந்த சேதமே ஏற்பட்டதாக உக்ரைன் தெரிவித்தது.
இந்த ஏவுகணை ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு அதிக வேகத்தில் செல்லும் என்றும், அதை இடைமறிக்க முடியாது என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
மேலும், வழக்கமான போர்முனையுடன் கூட இந்த ஆயுதத்தின் அழிவு சக்தி அணு ஆயுதத்திற்கு நிகரானது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதல், கடந்த மாதம் புடினின் இல்லத்தை இலக்கு வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டை உக்ரைன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இருவரும் மறுத்துள்ளனர்.
அண்மைய தாக்குதல்களில், உக்ரைனின் முக்கிய உட்கட்டமைப்புகளை குறிவைத்து தரை மற்றும் கடலில் இருந்து ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.





