ஆஸ்திரேலியாவில் கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து
ஆஸ்திரேலியாவில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக கிழக்குக் கரையில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் குறித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தீ பற்றி எரிகிறது. 10 இடங்களில் இன்னும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
சிட்னி உள்ளிட்ட பல்வேறு வட்டாரங்களில் வெப்பநிலை ஈராண்டில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
நியூ சௌத் வேல்ஸின் சில பகுதிகளில் நேற்று வெப்பநிலை நாற்பது டிகிரி செல்சியஸைத் தாண்டியது.
2021 ஜனவரிக்குப் பிறகு அது ஆக அதிகமாகும். மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் தீ மூட்டுவதற்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
5 அரசாங்கப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
சூடான, வறண்ட வானிலை இன்று வரை நீடிக்கும் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. எனினும் வியாழக்கிழமை முதல் வெப்பநிலை குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.