வட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாவில் கடுமையாகும் சட்டம்

அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனம் சமூக ஊடக தளங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் மற்றும் வாட்ஸ்அப் அரசியல், தேர்தல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கான விளம்பரங்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பதிவிட தடை விதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, தவறான தகவல்களின் பரவல் மற்றும் வெளிநாட்டு சக்திகளால் நடைபெறும் தேர்தல் குறுக்கீடுகளைத் தடுக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகும்.
மெட்டாவின் இந்த நடவடிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறது. குறிப்பாக, தேர்தல் நேரங்களில் தவறான தகவல்களை பரப்பும் முயற்சிகளை தடுக்க, யூரோ யூனியன் கடுமையான சட்டங்களை கொண்டு வந்துள்ளது.
கடந்த டிசம்பரில், டிக்டாக் செயலியில் பதிவிடப்பட்ட தவறான தகவல் கொண்ட விடியோவால் ரோமானியாவில் ஒரு தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த நவம்பரில் கூகுள் நிறுவனமும் ஐரோப்பாவில் அரசியல் விளம்பரங்களை நிறுத்தியிருப்பது, மெட்டாவின் தற்போதைய முடிவை வலுப்படுத்துகிறது.
அதற்கிடையில், அரசியல் சார்ந்த கருத்துக்களை பதிவிடும், விவாதிக்கும் உரிமை பயனாளர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.