யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்ட அறிக்கை
நாட்டில் ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் மற்றும் அதன் தொடர்ச்சியான பாதிப்புகள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி நவம்பர் 28, மாலை 6 மணி வரை 1,297 குடும்பங்களைச் சேர்ந்த 4,140 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்கவர்கள் தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேர் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு, சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ளம் காரணமாக ஒரு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், 85 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் புங்குடுதீவிலிருந்து குறிக்கட்டுவான் வரையான தரைப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. நெடுந்தீவு, நயினா தீவு, எழுவை தீவு, அனலை தீவிற்கான படகு சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அரியாலை, தொண்டைமானாறு, அராலி உவர் நீர் தடுப்பணைக் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அருகில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காரைநகர் பாலத்தில் கடல் அலைகள் மேவுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இவ் இடர்காலப்பகுதியில் மக்கள் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்ப்பது நல்லது என்றும், அவதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நிறைமாதக் கர்ப்பிணித் தாய்மார்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று பாதுகாப்பாகத் தங்குமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.




