பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அரசிடம் பணம் இல்லை – பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு, பெட்ரோல், டீசல், அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர, பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, பாகிஸ்தானில் விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து போராட்டங்கள் வாயிலாக வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அரசிடம் பணம் இல்லை, என, அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு போதுமான பணம், நிதியமைச்சகத்திடம் இல்லை. இதனால் தற்போது தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறி வரும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.
அவர், நம்பிக்கையில்லா ஓட்டெடுப்பின் வாயிலாக, அரசியலமைப்பு ரீதியாக பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் புலம்பி வருகிறார்.