ஹிஜாப் அணியாத பெண் ஊழியர்கள் ;ஈரானில் மூடப்பட்ட பிரபல நிறுவனம்!
ஈரானில் ஹிஜாப் அணியாத பெண் ஊழியர்களின் புகைப்படங்களை பதிவிட்ட டிஜிகாலா ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை மூட ஈரான் அரசாங்கம் உத்தரவிட்டது.
இஸ்லாமிய நாடான ஈரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இதனை கண்காணிக்க தனி பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் அமேசான் போன்ற நிறுவனங்களுடன் ஈரான் மக்களுக்கு பெரியளவில் தொடர்பில்லை.இதன் காரணமாக , ஈரானின் அமேசான் என்று அறியப்பட்ட டிஜிகாலா ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அங்கு மிகவும் பிரபலமடைந்தது.
இந்நிறுவனம் மாதம் ஒன்றுக்கு 4 கோடிக்கும் கூடுதலான வாடிக்கையாளர்களின் தேவையையும், 3 லட்சத்துக்கும் அதிகமான வர்த்தகர்களையும் கொண்டுள்ளது.இந்நிலையில், டிஜிகாலா ஆன்லைன் வர்த்தக நிறுவனம், அதன் அலுவலக நிகழ்ச்சியொன்றில் எடுக்கப்பட்ட, ஹிஜாப் இல்லாமல் பெண் ஊழியர்கள் இருக்கும் புகைப்படங்களை அதன் இணையதளத்தில் வெளியிட்டது.
இதையடுத்து, நிறுவனம் அரசின் விதிகளை மீறியதாக கூறி உடனடியாக மூடும்படி ஈரான் அரசாங்கம் உத்தரவிட்டது. மேலும், டிஜிகாலா நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.