IMF உடன் ஒத்துழைக்குமா அனுர அரசாங்கம் : முக்கிய கலந்துரையாடல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (17) இலங்கைக்கு வருகைதரவுள்ளது.
இந்த விஜயத்தின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் நான்காவது தவணை இலங்கைக்கு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நான்கு வருட கால நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்க அனுமதிக்கப்பட்ட மொத்த கடன் தொகை 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
அதன்படி, முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மார்ச் 21, 2023 அன்றும், இரண்டாவது தவணையாக 337 மில்லியன் அமெரிக்க டாலர்கள் டிசம்பர் 13, 2023 அன்றும் வெளியிடப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது கடன் தவணையாக இந்த வருடம் ஜூன் 12 ஆம் திகதி 336 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிக்கப்பட்டதுடன், இதன்படி சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட தூதுவர் திரு. பீட்டர் ப்ரூவர் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
குறித்த குழுவின் இலங்கை விஜயத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் நாட்டின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் கீழ் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராயப்பட உள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நீண்ட நேரம் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மூன்றாவது மதிப்பாய்வின் பின்னர், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நான்காவது தவணையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.