பேரிடரால் மீண்டும் வங்குரோத்து நிலைக்கு செல்லுமா இலங்கை?
பேரிடரால் இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலைக்கு செல்லும் என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
“நாட்டில் பேரிடர் ஏற்படுவதற்கு முன்னரே டிசம்பர் மாதம் அரசாங்கம் விழும் என்றார்கள்.
இப்படியானவர்களின் கருத்துகள் பற்றி அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.”
-என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பேரிடர் நிலையால் நாட்டு பொருளாதாரம் மீண்டும் விழும் என வெளியாகும் தகவல் பற்றி அமைச்சரிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு.
“ பேரிடரால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படியான நிலையிலும் சில தரப்பினர் அரசியல் நடத்துவதற்கு முற்படுகின்றனர். அதனால்தான் இடைக்கால அரசாங்கம் பற்றி எல்லாம் கதைக்கின்றனர்.
நாட்டில் அரசியல் கலாசாரம் மாறிவிட்டது என்பதை இவர்களுக்கு இன்னும் புரியவில்லை.
அதனால்தான் பழைய அரசியல் கலாசார மனோநிலையிலேயே இருக்கின்றனர்.” – என்றார் அமைச்சர்.




