தென்கொரியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ – அணைக்கப் போராடும் பல்லாயிரம் தீயணைப்பு வீரர்கள்

தென்கொரியாவில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தொடர்ந்து போராடுகின்றனர்.
தென்கிழக்கில் பல இடங்களில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் எரிகிறது. தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஹான் டக் சூ முதல் அதிகாரத்துவப் பணியாக மீட்பு நடவடிக்கைகளைப் பார்வையிட ஈசங் வட்டாரத்துக்குச் சென்றுள்ளார்.
அந்த வட்டாரத்தில் கிட்டத்தட்ட 7,000 ஹெக்டர் நிலம் எரிந்து சாம்பலானது. சுமார் 600 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தீயணைப்பாளர்களின் அயராத பணிக்குத் ஹான் நன்றி தெரிவித்துக் கொண்டார். தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் அவர் சந்தித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய காட்டுத்தீயால் குறைந்தது 4 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
பலத்த காற்றும் அதிகரிக்கும் வெப்பநிலையும் தீயணைப்பாளர்களின் பணியைச் சிரமமாக்கியுள்ளன. பல இடங்களில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.