விராட் கோலி ஒருநாள் போட்டியில் தகர்த்த சாதனைகள்!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 14 ஆயிரம் ரன்களைக் கடந்து விராட் கோலி வரலாறு படைத்துள்ளார்.
டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித கிரிக்கெட்டிலும் ஜாம்பவானாக வலம் வரும் விராட் கோலி, சில காலமாக பெரிய அளவில் ஸ்கோர் செய்யாமல் தடுமாறி வந்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் 6 சதங்களை விளாசிய கோலி, அடுத்த 15 மாதங்கள் 1 சதத்தை கூட அடிக்காமல் பார்முக்கு திரும்பப் போராடினார்.
இதற்கு முந்தைய இங்கிலாந்து தொடரில், ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்த விராட் கோலி தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்தார். இதனால், ரஞ்சி போட்டியில் விளையாட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அவர், முக்கியமான ஆட்டத்தில், தனது திறமையை பறைசாற்றி “கிங் கோலி” என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 175 போட்டிகளில் 8 ஆயிரம் ரன்களைக் கடந்த விராட் கோலி, அதற்கு அடுத்த ஒவ்வொரு ஆயிரம் ரன்களை கடக்கும் போதும் புதிய சாதனையை படைத்து வருகிறார். இந்தப் போட்டியில், 15-ஆவது ரன்னை எடுத்த போது, ஒரு நாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை கடந்த 3-ஆவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
சச்சின், சங்கக்கராவுக்குப் பிறகு இந்த மைல் கல்லை விராட் கோலி எட்டியுள்ளார். 350 ஆட்டங்களில் சச்சின் எட்டிய 14 ஆயிரம் ரன்களை, அவரை விட அதிவேகமாக, 287-ஆவது ஆட்டத்திலேயே எட்டிப்பிடித்து வரலாறு படைத்துள்ளார். இந்தப் போட்டியில், நசீம் ஷா கொடுத்த கேட்சை பிடித்த விராத் கோலி, இந்திய அணியில் விக்கெட் கீப்பராக இல்லாமல், பீல்டராக அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராகியுள்ளார். மேலும், இதுவரை, எந்த ஒரு வீரரும் செய்யாத சாதனையாக, ஐசிசி நடத்தும் தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக 5-ஆவது முறையாக ஆட்டநாயகன் விருதையும் விராட் கோலி பெற்றுள்ளார்.
முன்னதாக, இதே போட்டியில் இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நேற்றைய போட்டியில் ரோகித் முறியடித்தார்.