சர்வதேச மாணவர்களை வெளியேற்றும் அமெரிக்கா – சமூக வலைத்தள பதிவால் நேர்ந்த கதி

அமெரிக்காவில் கற்கும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமான மாணவர்கள் தாமாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் கல்வி விசாவை பயன்படுத்தி கிட்டத்தட்ட 15 லட்சம் மாணவர்கள் அங்குள்ள பல்கலைக்கழங்களில் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் ஈடுபடுவதாகவும், சமூக வலைதளங்களில் தேச விரோத கருத்துகளைப் பகிர்ந்து, லைக் செய்தவாகவும் அமெரிக்க அரசு குற்றம் சுமத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இவ்வாறான செயல்களில் ஈடுபட்ட 300க்கும் அதிகமான சர்வதேச மாணவர்களை நாட்டை விட்டு தாமாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவு திணை்ககளம் தெரிவித்து்ளளது.
மேலும், தொடர்ந்து மாணவர்களின் சமூக வலைதளப் பக்கங்களைக் கண்காணித்து வரும் வெளியுறவுத் துறை அமைச்சகம், இனிவரும் காலங்களில் புதிதாக விசா பெற விண்ணப்பிக்கும் மாணவர்களின் சமூக வலைதளப் பக்கங்களைக் கண்காணித்து விசா வழங்குவது குறித்து முடிவெடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி, ஹமாஸ் ஆதரவு மாணவர்கள் அதிகம் உள்ள கல்வி நிறுவனங்களுக்குத் தடை விதிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ கொண்டுவந்த திட்டத்தின்படி காஸா போருக்கு எதிராகப் போராடும் மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்க்கையைத் தடை செய்யவும், கல்வி விசாவை ரத்து செய்யவும் முடிவெடுக்கப்பட்டதாக அங்குள்ள அதிகாரிகள் கூறுகின்றனர்.