காசாவுக்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட தயாராகும் ட்ரம்ப்

காசாவுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிடுவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வருகிறார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான காசா சமாதானத்திற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
காசாவுக்கான விஜயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக சமாதான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்த நாடாக செயற்படும் எகிப்திற்கு, டொனால்ட் ட்ரம்ப் முதலில் விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, ட்ரம்ப் தனது வருடாந்த மருத்துவப் பரிசோதனைக்காக வால்டர் ரீட் மருத்துவமனைக்கு செல்லவுள்ளார். அதன் பின்னர் விரைவில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வது தொடர்பில் பரிசீலிக்கவுள்ளார்.
சமாதான உடன்பாட்டின் முக்கிய அம்சங்கள் தொடர்பில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரு தரப்பினரும் சமாதானத் திட்டத்தின் முதற்கட்டத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.