உத்தியோகபூர்வ செயல்களுக்கு டிரம்ப் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இயலாது; அமெரிக்க உச்ச நீதிமன்றம்
அமெரிக்க உச்ச நீதிமன்றம், ஜூலை 1ஆம் திகதி வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
அதிபர் என்ற முறையில் அவரது அதிகாரத்துக்கு உட்பட்டு மேற்கொண்ட செயல்களுக்குத் டிரம்ப் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இயலாது என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.முன்னதாக, குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதிலிருந்து சட்ட ரீதியான பாதுகாப்பு இருப்பதாகத் டிரம்ப் கூறியதைக் கீழ்நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் தோல்வியுற்றதை ஒப்புக்கொள்ளாமல் அதை மாற்றியமைக்க டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.மேல்முறையீட்டிற்குச் சாதகமாக ஆறு நீதிபதிகளும் எதிர்த்து மூன்று நீதிபதிகளும் வாக்களித்தனர்.
தற்போது டிரம்ப், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக மீண்டும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான அதிபர் ஜோ பைடனை எதிர்த்துக் களமிறங்கவுள்ளார்.இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த மேல்முறையீட்டு வழக்கில் வழங்கிய தீர்ப்பில், “அதிபராகப் பதவி வகிக்கையில் மேற்கொள்ளும் அதிகாரபூர்வச் செயல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதிலிருந்து, முன்னாள் அதிபர் ஒருவருக்குப் பாதுகாப்பு உண்டு என முடிவெடுத்துள்ளோம்,” என்று தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கைகள் குறித்த அச்சமின்றியும் நியாயமான முறையிலும் ஓர் அதிபர் தமது கடமைகளை ஆற்றுவது முக்கியம் என்று தலைமை நீதிபதி கூறினார்.“ஆனால் அதிகாரபூர்வமற்ற நடவடிக்கைகள் தொடர்பில் அதிபருக்கு இத்தகைய பாதுகாப்பு கிடையாது,” என்றார் அவர்.
இந்தத் தீர்ப்பைப் புகழ்ந்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட டிரம்ப், “நமது அரசமைப்புக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி இது. ஓர் அமெரிக்கர் என்பதில் பெருமையடைகிறேன்,” என்று கூறியுள்ளார்.ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமெரிக்க மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒன்று என்றும் இது ஓர் ஆபத்தான முன்மாதிரி என்றும் அதிபர் ஜோ பைடன் சாடியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையில், இந்த ஆண்டு நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்குமுன் டிரம்ப் விசாரணையை எதிர்கொள்ளும் சாத்தியம் மிகக் குறைவு என்பதை உச்ச நீதிமன்றத்தின் முடிவு காட்டுவதாக அவர் கூறினார்.
“அமெரிக்காவில் யாரும் அரசர் இல்லை என்ற அடிப்படையில்தான் இந்த நாடு தோற்றுவிக்கப்பட்டது,” என்றார் பைடன். யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்பதைக் குறிப்பிட்ட அவர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அந்த அடிப்படையையே மாற்றிவிட்டது என்றார்.
2020ஆம் ஆண்டின் அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து 2021 ஜனவரி 6ஆம் திகதி டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் பைடன், அதன் தொடர்பில் டிரம்ப் எதிர்நோக்கும் வழக்கின் முடிவு குறித்து இந்த ஆண்டின் தேர்தலுக்குமுன் அறிந்துகொள்ளும் உரிமை அமெரிக்கர்களுக்கு உண்டு என்றார்.