இலங்கை : ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் மீண்டும் ஆரம்பமாகும் பரிமாற்ற சேவை!
அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம், மத்திய தரைக்கடல் கப்பல் நிறுவனத்தால் நடத்தப்படும் கொள்கலன் பரிமாற்ற சேவையை ஆரம்பித்துள்ளது.
இதன்படி, மீள் ஏற்றுமதி கொள்கலன்களுடன் MV ‘MSC Ingrid’ கொள்கலன் கப்பல் நேற்று முதல் தடவையாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.
இரண்டாவது கொள்கலன் கப்பல் ‘எம்எஸ்சி ஸ்கை11’ மெடிட்டரேனியன் ஷிப்பிங் கம்பெனிக்கு சொந்தமானது. இந்த கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாகவும், கிட்டத்தட்ட 500 கொள்கலன்கள் அங்கு மீண்டும் ஏற்றப்படும் எனவும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கொள்கலன் போக்குவரத்து சேவையான எம்.எஸ்.சி அல்லது மத்தியதரைக் கப்பல் சேவையானது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் புதிய வர்த்தக தளத்துடன் இணைந்துள்ளமை விசேடமானது என ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோன்சன் லியு தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மூலோபாய இடத்தைப் பயன்படுத்தி இலங்கையை கப்பல் சேவைகளுக்கான கேந்திர நிலையமாக மாற்றும் திட்டம் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
கொள்கலன்களைக் கையாள்வது துறைமுகப் பொறிமுறையின் கடைசிப் படியாகும், அந்தச் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதன் மூலம் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் ஒரு மாபெரும் நிறுவனமாக உருவாகும் என அதன் பிரதம செயற்பாட்டு அதிகாரி திஸ்ஸ விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.