பல எதிர்ப்புகளையும் தாண்டி 37-க்கும் மேற்பட்ட நாடுகளில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்
விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தி கேரளா ஸ்டோரி’.
கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்டு பின்னர் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 37-க்கும் மேற்பட்ட நாடுகளில் நாளை (மே 12) வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நடிகை அடா ஷர்மா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,
“எங்கள் படத்தை பார்க்கப் போகும் கோடிக்கணக்கான மக்களுக்கும், அதனை ட்ரெண்ட் செய்பவர்களுக்கும் என்னுடைய நடிப்பை ரசிப்பவர்களுக்கும் நன்றி.
இந்த வார இறுதியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 37-க்கும் மேற்பட நாடுகளில் வெளியாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.