இரண்டாக பிளவடையும் ஆப்பிரிக்கா கண்டம் : உருவாகும் மாபெரும் கடல்!
ஒரு பெரிய விரிசல் வழியாக ஆப்பிரிக்கா கண்டம் மெதுவாகப் பிரிந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த செயல்முறை இறுதியில் ஒரு புதிய பெருங்கடலை உருவாக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதுடன், இது நிகழ இன்னும் மில்லியன் கணக்கான வருடங்கள் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கண்டத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு முக்கியமான புவியியல் செயல்முறையாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க பிளவு (EAR) வழியாக இந்த செயல்முறை நடந்து வருகிறது. இந்த பிராந்தியத்தில், சோமாலியன் தட்டு என்று அழைக்கப்படும் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதி, கண்டத்தின் பெரும்பகுதியை உருவாக்கும் பெரிய நுபியன் (Nubian) தட்டிலிருந்து மெதுவாக பிரிந்து வருவதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நிலம் சில மில்லிமீட்டர்கள் மட்டுமே நகர்கிறது. இது Y- வடிவ பிளவு அமைப்பின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த மூன்று தட்டுகளும் எத்தியோப்பியாவின் அஃபார் (Afar) பகுதியில் சந்திக்கின்றன, இதை விஞ்ஞானிகள் “டிரிபிள் ஜங்ஷன்” (Triple Junction) என்று அழைக்கிறார்கள்.
எத்தியோப்பியன் பிளவு, செங்கடல் பிளவு மற்றும் ஏடன் வளைகுடா பிளவு ஆகியவை ஒரே நேரத்தில் சந்திக்கும் உலகின் மிகச் சில இடங்களில் இதுவும் ஒன்றாகும் என்பதால் இந்தப் பகுதி தனித்துவமானதாகக் கருதப்படுகிறது.
இதேவேளை இந்தப் பிளவு செயல்முறை சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது எனவும் இது செங்கடலில் இருந்து மொசாம்பிக் வரை சுமார் 2,174 மைல்கள் தூரம் நீண்டுள்ளது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.





