விமானத்தில் ஏற்பட்ட விபரீதம் – பயணித்த இடத்திற்கே திரும்பிய சிங்கப்பூர் விமானம்

சீனாவின் Xi’an நகரிலிருந்து புறப்பட்ட சிங்கப்பூரின் Scoot விமானம் பயணித்த இடத்திற்கே திரும்பி வந்துள்ளது.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் Xi’an Xianyang சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டதாக Scoot விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
விமான இயந்திரம் தீப்பற்றி எரிந்ததைப் பார்த்ததாகப் பயணி ஒருவர் கூறியுள்ளார். எனினும் இயந்திரம் தீப்பற்றி எரியவில்லை என்று உறுதிசெய்த Scoot முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர உதவிப் பிரிவுகளின் உதவியை நாடியதாகத் தெரிவித்தது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாற்றை சரிசெய்யவே விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டதாக Scoot நிறுவனம் கூறியது.
“அனைத்துப் பயணிகளுக்கும் தேவையான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இன்று சிங்கப்பூருக்குத் திரும்புவதற்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். பயணிகள், ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும்,” என்று Scoot நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.