பாகிஸ்தானில் இருவேறு இடங்களில் தற்கொலைக்குண்டு தாக்குதல் – 08 பேர் பலி!
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட இரண்டு கார்குண்டு வெடிப்பில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலூசிஸ்தான் மாகாணத்தின் ஒரு மாவட்டமான டர்பத்தில் முதல் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.
ஒரு தற்கொலை குண்டுதாரி ஒரு வாகனத்தை பாதுகாப்பு வாகனத் தொடரணி மீது மோதியதில் இரண்டு பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர், மேலும் 23 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் இடம்பெற்று ஒரு சில மணிநேரங்களில் தென்மேற்கு நகரமான சாமனில் மற்றொரு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.
இதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் என்று அரசாங்க நிர்வாகி இம்தியாஸ் அலி கூறினார்.
இருப்பினும் இவ்விரு தாக்குதல்களுக்கும் எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.





