மிதாலி ராஜ் சாதனையை முறியடித்த ஸ்மிரிதி மந்தனா!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள அயர்லாந்து மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஜனவரி 10 முதல் 15-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் தொடரின் முதல் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது.
பரபரப்பாக தொடங்கப்பட்ட முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அயர்லாந்து கேப்டன் கேபி லெவிஸ் 92 ரன்களும், லீ பால் 59 ரன்களும் அடிக்க 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 238 ரன்களை சேர்த்தது அயர்லாந்து அணி.
239 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில், ஸ்மிரிதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். நிதானமாக விளையாடிய ஸ்மிரிதி 41 ரன்னில் வெளியேற, அற்புதமாக விளையாடிய பிரதிகா 89 ரன்கள் அடித்து அசத்தினார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய டேஜல் 53 ரன்கள் அடித்து அசத்த, 34.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.
அயர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் 41 ரன்களை அடித்த ஸ்மிரிதி மந்தனா, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களை கடந்த இந்திய வீராங்கனையான மிதாலி ராஜின் சாதனையை முறியடித்தார். மிதாலி ராஜ் 112 இன்னிங்ஸ்களில் 4000 ODI ரன்களை கடந்திருந்த நிலையில், ஸ்மிரிதி மந்தனா 96 இன்னிங்ஸ்களில் கடந்து முதல் இந்திய வீராங்கனையாக சாதனை படைத்துள்ளார்.
முதல் இந்திய வீராங்கனை மட்டுமில்லாமல், அதிவேகமாக இந்த சாதனையை படைத்த 3வது உலக வீராங்கனை என்ற சாதனையையும் ஸ்மிரிதி மந்தனா படைத்துள்ளார்.
அதிவேகமாக 4000 ODI ரன்கள் அடித்தவர்கள் பட்டியல் (உலகளவில்):
* பெலிண்டா கிளார்க் – 86 இன்னிங்ஸ்கள் – ஆஸ்திரேலியா
* மெக் லானிங் – 89 இன்னிங்ஸ்கள் – ஆஸ்திரேலியா
* ஸ்மிரிதி மந்தனா – 96 இன்னிங்ஸ்கள் – இந்தியா