மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கம் – பாதிப்பு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
மொரோக்கோவில் அண்மையில் உலுக்கிய கடும் நிலநடுக்கத்தால் 2.8 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மலைப் பகுதிகளில் 2,930 கிராமங்கள் சேதமடைந்ததாக மொரோக்கோவின் வரவுசெலவுத் திட்டத்துக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் Faouzi Lekjaa கூறினார்.
இம்மாதம் 8ஆம் திகதி 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மொரோக்கோவை உலுக்கியது. மலைப்பகுதிகளில் இருந்த பலரைச் சென்றடைவதில் சவால்கள் இருந்ததாய் அதிகாரிகள் கூறியிருந்தனர்.
சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 60,000 வீடுகள் சேதமடைந்தன. அவற்றுள் 30 விழுக்காட்டுக்கும் அதிகமான வீடுகள் முழுமையாக இடிந்துவிழுந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சுமார் ஓராண்டுக்கு மாதந்தோறும் 244 டொலர் உதவிப் பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தரைமட்டமான வீடுகளுக்கும் சேதமடைந்த வீடுகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்றார் அமைச்சர்.
அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் 1960ஆம் ஆண்டுக்குப் பிறகு மொரோக்கோவை உலுக்கிய மிகக் கடுமையான நிலநடுக்கமாகக் கருதப்படுகிறது.
மறுசீரமைப்புப் பணிகள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.