தேர்தல் சட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து இந்தோனீசியாவில் வெடித்த ஆர்ப்பாட்டங்கள்
இந்தோனீசியாவின் தேர்தல் சட்டத்தில் மாற்றங்கள் செய்வதை அந்நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 22) ஒத்திவைத்துள்ளது.
அதிபர் பதவியிலிருந்து விலகவுள்ள ஜோக்கோ விடோடோவின் அரசியல் பலத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையாகப் பார்க்கப்படும் அந்த மாற்றங்களை எதிர்த்து இந்தோனீசியாவின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அதனைத் தொடர்ந்து மாற்றம் கொண்டுவருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கான அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமர்வை நடத்தப் போதுமானோர் இல்லாததால் அதை ஒத்திவைக்க வேண்டியிருந்ததாக ஹபிபுரோக்மான் எனும் அரசியல் தலைவர் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தோனீசியாவில் மாநிலத் தேர்தல்களுக்கான பதிவுகள் இம்மாதம் 27ஆம் திகதியன்று தொடங்கும். அதற்குள் தேர்தல் சட்டத்தில் திட்டமிடப்பட்ட மாற்றங்களைக் கொண்டுவர நாடாளுமன்றம் கூடுமா என்பது தெரியவில்லை.சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால், அவை இந்த வாரத் தொடக்கத்தில் அரசமைப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு மாறாக அமையும்.
மாற்றங்கள், அதிக சக்திவாய்ந்த ஜகார்த்தாவின் ஆளுநர் பதவியைப் பிடிப்பதற்கான போட்டியின் மத்தியில் அரசாங்கத்தை விமர்சிப்பவர் ஒருவரை அடக்க வகைசெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாற்றங்கள், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜாவா மாநிலத் தேர்தலில் விடோடோவின் ஆக இளைய மகன் போட்டியிட வகைசெய்யும் என்றும் கூறப்படுகிறது.
உலகின் மூன்றாவது ஆகப் பெரிய ஜனநாயக நாடான இந்தோனீசியாவில் கடந்த ஒரு வாரமாகப் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. அதன் மத்தியில் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கும் சட்டத் துறைக்கும் இடையே ஆதிக்கம் செலுத்துவதற்கான போராட்டமும் இருந்து வருகிறது.
விடோடோவின் தவணைக் காலத்தின் கடைசி கட்டத்தில் இத்தகைய சூழல் நிலவுகிறது.இதன் தொடர்பில் கவலைகள் ஏதும் இல்லை என்று விடோடோ கூறியுள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பும் நாடாளுமன்றம் எடுக்கும் நடவடிக்கைகளும் நடைமுறைகளின் அங்கமே என்றார் அவர்.