ஆய்வக எலியாக மாறிய மக்கள் : பல உயிரிழப்புகள் பதிவாகும் என எச்சரிக்கை!
கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் இலங்கைக்கு பதிவு செய்யப்படாத 785 வகையான மருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் யார் சிகிச்சை எடுத்தாலும் நோயாளிகள் பலர் உயிரிழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.
புதிய மருந்துகளை ஆர்டர் செய்வதற்கு கால அவகாசம் எடுக்கும் எனத் தெரிவித்த அவர், அதுவரை இறக்குமதி செய்யப்பட்ட குறித்த மருந்துகளையே பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் நோயாளிகள் பலர் உயிரிழக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் சுகாதார அமைச்சராக இருந்த போது வருடத்தில் ஏழு மருந்துகளை கூட இறக்குமதி செய்யவில்லை எனவும், வரலாற்றில் இது போன்ற நிலை ஏற்பட்டதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சில மருந்து வகைகளின் பொதிகளைப் பார்க்கும்போது சில வைத்தியர்கள் தமக்கு தொலைபேசியில் அழைத்து அவை வீட்டிலோ அல்லது வைத்தியசாலையிலோ தயாரிக்கப்படுகின்றன எனத் தெரிவிப்பதாகவும் ராஜித்த சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.