கனடாவில் இந்து கோவிலை நாசம் செய்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சுர்ரே நகரில் பழமையான கோவில்களுள் ஒன்றான லக்ஷ்மி நாராயண் மந்திர் ஆலயம் உள்ளது. நேற்று (12) இரவு அந்த கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கி நாசமாக்கி உள்ளனர்.
அதன்பின்னர் கோவிலின் கதவில் காலிஸ்தான் ஆதரவு போஸ்டர்களை ஒட்டிவிட்டு சென்றுள்ளனர். அதில் கடந்த ஜூன் மாதம் 18ம் திகதி, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கு பங்கு உள்ளது, உடனடியாக கனடா அரசு இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த போஸ்டர்களை ஒட்ட இரண்டு முகமூடி அணிந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் வந்ததை அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் சுர்ரே பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது முதன்முறை அல்ல. இவ்வாறு ஏற்கனவே 3 முறை கனடா கோவில்களின்மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இது இந்திய சமூகத்தினரிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது ஏப்ரலில் ஒன்டாரியோவில் உள்ள சுவாமிநாராயண் கோவிலும், பிப்ரவரியில் மிசிசாகாவில் உள்ள ராம் மந்திர் கோவிலும், ஜனவரியில் பிராம்ப்டனில் உள்ள ஒரு கோவிலும் காலிஸ்தான் ஆதரவாளர்களால் சிதைக்கப்பட்டது.