தாய்லாந்தில் ‘ஜெட்ஸ்கி’ விபத்து; சீனாவை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் பலி
தாய்லாந்தின் புக்கெட் தீவுக்கு அருகே நிகழ்ந்த ‘ஜெட்ஸ்கீ’ (jet ski) நீர் வாகன விபத்தில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர் கொல்லப்பட்டார்.
அச்சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த இன்னொரு சுற்றுலாப்பயணி காயமுற்றார். தாய்லாந்தில் உள்ள சீனத் தூதரகத்தை மேற்கொள்காட்டி சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான சிசிடிவி ஊடகம் இத்தகவல்களை வெளியிட்டது.
விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சிசிடிவி குறிப்பிட்டது. புக்கெட்டில் இரண்டு நாள்களில் சீன சுற்றுப்பயணிகள் சம்பந்தப்பட்ட இரண்டாவது சம்பவம் இது.
புக்கெட்டின் வடக்குப் பகுதிக்கு அருகே உள்ள கோ ரச்சா தீவுக்குப் பக்கத்தில் கடந்த திங்கட்கிழமையன்று (ஜனவரி 13) சீனாவைச் சேர்ந்த 33 பேர் இருந்த படகு கவிழ்ந்ததாக சிசிடிவி தெரிவித்தது. அப்படகில் ஐந்து படகு ஊழியர்களும் இருந்தனர் என்றும் அது குறிப்பிட்டது.
புக்கெட், சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமாக இருக்கும் சுற்றுலாத்தலமாகும். இவ்வாண்டின் சீனப் புத்தாண்டு விடுமுறை காலத்தில் சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் பலர் புக்கெட்டுக்குப் பயணம் மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.