சென்னை -மலேசியா இடையே விமான சேவை அதிகரிப்பு!
சென்னை, அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு தினமும் 2 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள், 2 ஏர் ஏசியா விமானங்கள், 1 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 1 என 5 விமானங்கள் தினமும் இயக்கப்பட்டு வந்தன.
அதுபோல கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு 5 விமானங்கள் வந்தன. சென்னை- மலேசியா இடையே தினமும் 10 விமான சேவைகள் இயக்கப்பட்டன.
மலேசியா சுற்றுலா தளமாக இருப்பதாலும் மலேசிய நாட்டில் உள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இணைப்பு விமானங்கள் செல்வதால் சென்னையில் இருந்து மலேசியாவிற்கு பயணிகள் அதிக அளவில் பயணம் செய்கின்றனர்.
தினமும் 5 விமானங்கள் இயக்கப்படுவதால் மலேசியா செல்லும் பயணிகளுக்கு விமானங்களில் டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த நிலையில் சென்னை- கோலாலம்பூர் இடையே தினசரி கூடுதல் விமான சேவையை இயக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பாட்டிக் ஏர்லைன்ஸ் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தினமும் மாலை புறப்படும் இந்த விமானம், இரவு 10:25 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து விட்டு மீண்டும் இரவு 11:15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறது. இந்த விமானம் போயிங் ரக விமானம் என்பதால், 189 பயணிகள் வரை ஒரே நேரத்தில் பயணிக்க முடியும்.
சென்னை- கோலாலம்பூர் இடையே கூடுதலாக மேலும் ஒரு விமானம் சேவை தொடங்கப்பட்டு உள்ளது விமான பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.