கேரளாவில் சாக்லெட் சாப்பிட்ட நான்கு வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்

சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் ஒன்று சாக்லெட். ஆனால், பள்ளியில் சாக்லெட் சாப்பிட்ட நான்கு வயது சிறுவன் ஒருவர், பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மர்ம சம்பவம் கேரளாவின் கோட்டயத்தில் நிகழ்ந்துள்ளது.
சாக்லெட் சாப்பிட்ட பிறகு தனக்குத் தலைச்சுற்றல் வந்ததாக அந்தச் சிறுவன் கூறியிருந்தார். அதையடுத்து, சிறுநீர்ப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் சுறுசுறுப்பைக் குறைக்கும் ஒருவகை மருந்து அதில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் காவல்துறையினர் மார்ச் 2ஆம் திகதி தெரிவித்தனர்.
சிறுவன் பிப்ரவரி 17ஆம் திகதி பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறுவனின் தாயார் விசாரித்தபோது அவர் சாக்லெட் சாப்பிடுவதைத் தாம் பார்த்ததாகப் பள்ளி ஆசிரியர்களில் ஒருவர் கூறியிருந்தார்.
அதையடுத்து மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்ட பிறகு, சிறுநீர்ப் பரிசோதனையில் சோர்வூட்டும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுவனுக்கு அந்த சாக்லெட் எங்கிருந்து கிடைத்தது என்றோ சோர்வூட்டும் மருந்து சிறுவனின் உடலில் எவ்வாறு வந்தது என்றோ தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.அதே சாக்லெட்டின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட மற்றொரு சிறுவனுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சில தினங்கள் இருக்கும் நிலை ஏற்பட்டது.
ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளராகப் பணியாற்றும் சிறுவனின் தாயார், தம் கணவரிடமிருந்து பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகிய இருவரிடமும் புகார் அளித்து விசாரணை மேற்கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.
இதற்கிடையே, தன்னுடைய தாயார்தான் சாக்லெட் தந்ததாக தொடக்கத்தில் சிறுவன் கூறிய நிலையில், இல்லை என்று அதனை மறுத்துவிட்டார் சிறுவனின் தாயார்.