போராட்ட வழக்கில் இடைக்கால ஜாமீன் பெற்ற இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி
நவம்பர் 26 போராட்டம் தொடர்பான வழக்குகளில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) நிறுவனர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபிக்கு ஜனவரி 13ஆம் தேதி வரை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
அவரது இடைக்கால ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணைக்கு நீதிபதி ஷபீர் பாட்டி தலைமை தாங்கினார். புஷ்ரா பீபி, தர்னோல் காவல்நிலையத்தில் பதியப்பட்ட நான்கு வழக்குகளிலும், ரமணா காவல்நிலையத்தில் மூன்று வழக்குகளிலும் இடைக்கால ஜாமீன் பெறுவதற்காக அவரது வழக்கறிஞர் குழுவுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
1000 மதிப்பிலான ஜாமீன் பத்திரங்களை சமர்ப்பித்ததன் பேரில் அவரது ஜாமீனுக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
முன்னதாக டிசம்பர் 21 அன்று, ராவல்பிண்டியில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் (ATC) அவருக்கு 32 வழக்குகளில் ஜனவரி 13 வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
அறிக்கைகளின்படி, புஷ்ரா பீபி தனது வழக்கறிஞர்களுடன் ATC முன் ஆஜராகி, மே 9 வன்முறையுடன் தொடர்புடைய 23 வழக்குகள் உட்பட மொத்தம் 32 வழக்குகளில் ஜாமீன் கோரினார். ராவல்பிண்டி, அட்டாக் மற்றும் சக்வால் ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அவர் இப்போது இடைக்கால ஜாமீன் பெற்றுள்ளார்.